ஊத்தங்கரை அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து; 11 பேர் படுகாயம்


ஊத்தங்கரை அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து; 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 8:49 PM GMT)

ஊத்தங்கரை அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊத்தங்கரை,

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு நேற்று தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 28) என்பவர் ஓட்டி சென்றார். இதில், 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

ஊத்தங்கரை அருகே உள்ள இமாம் சாய்பு ஏரிக்கரை பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், டிரைவர் ரமேஷ், பஸ்சில் பயணம் செய்த பாவக்கல்லை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவி கவுசல்யா (18), அனுமன்தீர்த்தத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளான அபிநயா (16), சுவேதா (16), ஈச்சம்பாடியை சேர்ந்த லிபியா (16), குமாரம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (45), சாந்தி (40), பறையப்பட்டியை சேர்ந்த அல்லி (40), ரங்கா (40), கோடீஸ்வரன் (31), சேகர் (55) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில், மாணவிகள் கவுசல்யா, அபிநயா, சுவேதா, லிபியா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story