காதலர் தினம்: கடற்கரையில் குவிந்த இளம் ஜோடிகள்


காதலர் தினம்: கடற்கரையில் குவிந்த இளம் ஜோடிகள்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:45 PM GMT (Updated: 14 Feb 2019 9:11 PM GMT)

புதுச்சேரியில் காதலர் தினத்தையொட்டி கடற்கரையில் ஏராளமான இளம் ஜோடிகள் குவிந்தனர்.

புதுச்சேரி, 

நாடு முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதேபோல் புதுச்சேரியிலும் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களாக வெளி மாநிலங்களில் இருந்து பல்வேறு வண்ண ரோஜாக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் பரிசு பொருட்கள் விற்பனை கடைகளிலும் இளம் ஜோடிகள் தங்களின் காதலர், காதலிக்காக பிடித்த பரிசு பொருட்களை தேடி பிடித்து வாங்கினர்.

காதலர் தினத்தையொட்டி நேற்று காதலர்கள் தங்களின் காதலிக்காக பல வண்ண ரோஜா பூக்களையும், அவர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தங்களின் காதலை மீண்டும் வெளிப்படுத்தினர்.

காதலர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான ஜோடிகள் பாரதி பூங்காவில் தஞ்சம் அடைவார்கள். தற்போது கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்துவதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பூங்காவின் நுழைவு வாயில் கதவுகளுக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு பூட்டப்படும் பூட்டினை போட்டு பூட்டிவிட்டனர்.

இதனால் பாரதி பூங்காவுக்கு வந்த இளம் ஜோடிகள் பூங்காவுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் கடற்கரைக்கு சென்றனர். எனவே கடற்கரையில் குவிந்த ஏராளமான இளம் ஜோடிகள் கற்குவியல்களில் அமர்ந்து கடல் அழகினை ரசித்தனர். ஒரு சில ஜோடிகள் தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, ஆரோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர்.

இதேபோல் கடற்கரைக்கு வந்திருந்த காதலர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் பூங்கொத்து கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கிடையே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், இந்து முன்னணியினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story