வாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு
வாடிப்பட்டி தாலுகாவில் மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் மத்திய அரசின் ஊக்கத்தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கான சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு பணி கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் நஞ்சை நிலமாக இருந்தால் 2½ ஏக்கர், புஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்கு மிகாமல் இருப்பவர்கள் பயன்பெறலாம். இந்த சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அவர்களது நிலத்திற்கான சிட்டா நகல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியவை இணைக்கப்பட்டு விண்ணப்பம் பெறப்படுகிறது. தற்போது விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளநிலையில் அதற்கு முன்பாக, பயனாளிகள் பட்டியல் இறுதிசெய்வதற்கான பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வாடிப்பட்டி தாலுகாவில் ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது. மேலும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் விவசாயிகளின் வீட்டிற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கணக்கெடுப்பு பணியையும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பட்டியல் தயாரிக்கும் பணியையும் கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், மாவட்ட வழங்கல் அதிகாரி முருகசெல்வி, தாசில்தார் பார்த்தீபன், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அதிகாரி நாராயணன் ஆகியோர் இருந்தனர்.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான மதுரை மருத்துவக்கல்லூரியில் கலெக்டர் நடராஜன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் வாக்கு எண்ணும் எந்திரங்கள் வைக்கும் அறைகளை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story