ஆற்காடு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு
ஆற்காடு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆற்காடு,
வேலூர் சைதாப்பேட்டை கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் தமிழரசன் (வயது 26). இவர், நேற்று முன்தினம் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகரசபை அலுவலகம் அருகே உள்ள விவசாய நிலத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் தமிழரசன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நத்தியாலம் சுடுகாட்டு பகுதியில் சந்திப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தங்கராஜ் (28), வினோத்குமார் (26) என்பதும், இவர்கள் 2 பேர் உள்பட 5 பேர் சேர்ந்து கடந்த 12-ந் தேதி இரவு தமிழரசனின் வீட்டிற்கு சென்று அவரை ஆட்டோவில் மேல்விஷாரம் நோக்கி அழைத்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் தமிழரசனை மதுகுடிக்க வைத்துள்ளனர். பின்னர் நத்தியாலம் பெட்ரோல் பங்க் எதிரே ஆட்டோவை நிறுத்திவிட்டு, மதுபாட்டிலை உடைத்து தமிழரசன் இடுப்பில் குத்தியுள்ளனர். உடனே தமிழரசன் அங்கிருந்து சாலையை கடந்து தனியார் நிலத்தில் ஓடியுள்ளார். அப்போது அவரை கீழே தள்ளி கல்லால் தாக்கியுள்ளனர். மேலும் மதுபாட்டில்களை கொண்டு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் அறுத்து தமிழரசனை கொலை செய்ததும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் தங்கராஜ், வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story