புதிதாக உருவாக்கப்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக பணிகள் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


புதிதாக உருவாக்கப்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக பணிகள் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 Feb 2019 10:30 PM GMT (Updated: 15 Feb 2019 4:58 PM GMT)

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் இருந்தன. நிர்வாக வசதிக்காக மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் 2 ஆக பிரிக்கப்பட்டு கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது. கடத்தூரை தலைமையிடமாக கொண்ட இந்த புதிய ஊராட்சி ஒன்றியத்தில் சிந்தல்பாடி, கோபிசெட்டிப்பாளையம், புட்டிரெட்டிப்பட்டி, குருபரஅள்ளி, ஒசஅள்ளி, கர்த்தானூர், கேத்துரெட்டிப்பட்டி, லிங்கநாயக்கனஅள்ளி, ராமியனஅள்ளி, புளியம்பட்டி, ரேகடஅள்ளி, சில்லாரஅள்ளி, சுங்கரஅள்ளி உள்பட மொத்தம் 25 கிராம ஊராட்சிகள் இடம் பெற்று உள்ளன.

கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. கடத்தூர் புதிய ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. திருமண நிதி உதவி, குடிநீர், பராமரிப்பு, பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்க மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், கடத்தூரில் புதிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் செயல்பட தொடங்கினால் அதற்கென தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு செயல்பட தொடங்குவார்கள். இதன் மூலம் கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வழிவகை ஏற்படும். குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க முடியும். எனவே இந்த புதிய ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக பணிகள் தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story