சீன என்ஜின் பயன்படுத்த எதிர்ப்பு 400 விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
சீன என்ஜின் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் 400 விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று காலை சங்க தலைவர் அரசு தலைமையில் காசிமேட்டில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ன்படி விசைப்படகின் நீளம் 10 மீட்டர் குறையாமல் 20 மீட்டர் வரையிலும், 150 குதிரை திறன் மிகாமலும் இருக்கவேண்டும்.
ஆனால் தற்போது விசைப்படகின் நீளம் 20 மீட்டரில் இருந்து 24 மீட்டர் வரை உயர்த்தி கொள்ளலாம் என்றும், என்ஜினின் குதிரை திறன் 150-ல் இருந்து 240 வரை உபயோகப்படுத்தலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்தலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மீனைவிட அதிக வேகமாக செல்லும் சீன என்ஜின் உள்பட அதிவேக குதிரைதிறன் கொண்ட என்ஜின்களை விசைப்படகில் பொருத்தி மீன் பிடிப்பதால் மீன்கள் மட்டும் இல்லாமல் இயற்கை வளங்கள் அனைத்தும் அழிந்துவிடும். நாளடைவில் மீன்பிடி தொழிலே இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மீனவர்களின் விசைப்படகில் 240 குதிரை திறன் கொண்ட சீன என்ஜினை பொருத்திக்கொண்டு மீன் பிடிக்கலாம். விசைப்படகின் நீளம் 18 முதல் 24 வரை உயர்த்தி கொண்டு தொழிலுக்கு செல்லலாம் என்ற தமிழக அரசு அரசாணையை சென்னையில் அமல்படுத்தக்கூடாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தீர்மான நகலை காசிமேடு மீன் வளத்துறை உதவி இயக்குனரிடம் மீனவர்கள் அளித்தனர்.
அதன்படி நேற்று முதல் சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நேற்று 400 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
Related Tags :
Next Story