ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்


ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 15 Feb 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் திண்டிவனம், வானூர் பகுதிகளில் அமைத்திருந்த வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்காக அனுமதி கேட்டு விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேசை அணுகினார். அப்போது அவர் ரூ.1 லட்சம் லஞ்சமாக தரும்படியும், அந்த தொகையை தவணை முறையில் கொடுக்கலாம் என்றும் கூறினார். மேலும் அவர் முதல் தவணையாக ரூ.30 ஆயிரத்தை தரும்படியும் கேட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துச்சென்று உதவி இயக்குனர் லோகேசிடம் ஜெயராமன் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது லோகேசை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் பலவற்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேசை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து சென்னை நகர் ஊரமைப்பு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story