40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் ‘அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைவது எங்களுக்கு மகிழ்ச்சி’
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று தேனியில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசினார்.
தேனி,
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உத்தரவின்பேரில் தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் குறித்து அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி என்.ஆர்.டி. நகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
2001-ல் டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆனார். ஏற்றிவிட்ட ஏணியான டி.டி.வி.தினகரனை எட்டி உதைத்ததன் விளைவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். நேற்று வரை எங்களை லட்டர்பேடு கட்சி என்றார்கள். இன்றைக்கு அ.தி.மு.க.வுக்கு எதிரியே அ.ம.மு.க. தான் என்கிறார்கள். மக்கள் ஆதரவும், அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேரின் ஆதரவும் அ.ம.மு.க. வுக்கு தான் உள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முடிவு செய்யும் தருவாயில் உள்ளதாக கூறுகிறார்கள். அவர்கள் கூட்டணி சேர்ந்தால் தான் எங்களுக்கு நல்லது. எங்கே அவர்கள் பிரிந்து விடுவார்களோ என்று நினைத்தேன். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைவது எங்களுக்கு மகிழ்ச்சி. எப்படியும் அ.தி.மு.க.வுக்கு 15 தொகுதி கொடுப்பார்கள். அந்த 15 தொகுதிகளிலும் அ.ம.மு.க. தான் வெற்றி பெறும்.
அ.தி.மு.க., தி.மு.க.வில் தற்போது தலைமை சரியில்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்கவில்லை. டி.டி.வி.தினகரன் தான் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனை நிறுத்த முயற்சி செய்கிறார். பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். இது எங்களுக்கு நல்ல வாய்ப்பு. நிச்சயம் அ.ம.மு.க. பெற்றி பெறும். அதற்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 33 பேர் கொண்ட குழுவை ஒரு வாரத்துக்குள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘தேசிய கட்சிகளோடு மாநில கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் மாநில உரிமைகளை பாதுகாக்க முடியாது. மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால் தான் பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் நாம் இருப்போம். அ.ம.மு.க. மாநில கட்சிகளோடு கூட்டணி அமைக்கும். இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று மிகப்பெரிய வெற்றி பெறுவோம்’ என்றார்.
முன்னதாக கூட்டத்தில் தேனி நகர செயலாளர் காசிமாயன் வரவேற்றார். இந்த கூட்டத்தில், மாநில மருத்துவர் அணி தலைவர் கதிர்காமு, ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் பீமராஜ், ஒன்றிய இணை செயலாளர் தவசெல்வம், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் பாலசந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வெற்றிவேலன், ஆண்டிப்பட்டி பேரூர் செயலாளர் பொன் முருகன், பேரூர் துணை செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார் ரபீக், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தேவாரம் சாந்தி, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் சுமதி, கம்பம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் அறிவழகன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் தங்கையா, மாவட்ட பிரதிநிதி ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் ராஜாமணி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அசோக்குமார், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் லக்கிசலீம், இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகி ஜே.எஸ்.அபுதாகீர், தேனி மாவட்ட விவசாய அணி செயலாளர் வி.எஸ்.தக்காளி சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story