ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

ஓமலூர் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொட்டியபுரம் ஊராட்சியில் ஆசாரிபட்டறை, கட்டிக்காரனூர், பொட்டியபுரம் காலனி, ஒட்டத்தெரு ஆகிய பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம பகுதி மக்களுக்கு பொட்டியபுரம் சந்தை அருகே உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு குடிநீர் வினியோகம் செய்யும்போது ஒரு சில பகுதிகளுக்கு அதிகளவில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டதாகவும், இதனால் மற்ற பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பின்னரும் இந்த பிரச்சினை தொடர்ந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் காமலாபுரம்-நாலுகால்பாலம் சாலையில் ஆசாரிபட்டறை பஸ்நிறுத்தம் அருகில் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள், வேலைக்கு புறப்பட்ட பணியாளர்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். இதையடுத்து காலை 9.30 மணியளவில் சாலைமறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story