தலைவாசல் அருகே தட்டுகளுடன் மாணவிகள் சாலைமறியல் கல்லூரி விடுதியில் தரமான உணவு வழங்க கோரிக்கை


தலைவாசல் அருகே தட்டுகளுடன் மாணவிகள் சாலைமறியல் கல்லூரி விடுதியில் தரமான உணவு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2019 3:30 AM IST (Updated: 16 Feb 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே, கல்லூரி விடுதியில் தரமான உணவு வழங்கக்கோரி மாணவிகள் உணவு தட்டுகளுடன் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடசென்னிமலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியையொட்டி பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவிகள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளும் தங்கி படித்து வருகிறார்கள். 110 மாணவிகள் தங்கி உள்ளனர்.

இந்த விடுதியில் தரமான உணவு வழங்கப்படவில்லை என கூறியும், சரியான நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என கூறியும் மாணவிகள் நேற்று காலை 9 மணியளவில் வடசென்னிமலை-சதாசிவபுரம் ரோட்டில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது உணவு தட்டுகளையும் கையில் எடுத்து வந்திருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், ஆத்தூர் தாசில்தார் செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சரியான நேரத்தில் உணவு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story