பா.ஜனதாவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிவசேனா திடீர் நிபந்தனை ‘முதல்-மந்திரி பதவியை விட்டு தர வேண்டும்’


பா.ஜனதாவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிவசேனா திடீர் நிபந்தனை ‘முதல்-மந்திரி பதவியை விட்டு தர வேண்டும்’
x
தினத்தந்தி 16 Feb 2019 4:30 AM IST (Updated: 16 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவியை தங்கள் கட்சிக்கு விட்டு தர வேண்டும் என்றும் பா.ஜனதாவிடம் சிவசேனா நிபந்தனை விதித்து உள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, சட்டமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்றும், முதல்-மந்திரி பதவியை தங்கள் கட்சிக்கு விட்டு தர வேண்டும் என்றும் பா.ஜனதாவிடம் சிவசேனா நிபந்தனை விதித்து உள்ளது.

பெரிய அண்ணன்

மராட்டியத்தில் சுமார் 25 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த சிவசேனா- பா.ஜனதா கட்சிகள் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரிந்தன. இதையடுத்து நடந்த தேர்தலில் பா.ஜனதா 122 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதுநாள் வரை கூட்டணியில் பெரிய அண்ணன் அந்தஸ்தில் இருந்து வந்த சிவசேனாவால் 63 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இதனால் வேறு வழியில்லாமல் பா.ஜனதாவுடன் கூட்டணியில் சேர்ந்து கொண்டு ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது. எனினும் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றதை சிவசேனாவால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

இதனால் அவா்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் எதிர்க்கட்சியினருக்கும் ஒருபடி மேலேபோய் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இனிமேல் பா.ஜனதாவுடன் எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது என உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மீண்டும் கூட்டணி

எனினும் பா.ஜனதாவினர் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தே வரும் தேர்தல்களை சந்திப்போம் என நம்பிக்கையுடன் கூறிவந்தனர். மேலும் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க எல்லா வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், வருவாய்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீலுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நேற்று முன்தினம் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் விவசாய கடனை 100 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என உறுதி அளிக்க வேண்டும், மும்பை, தானேயில் 500 சதுர அடி வரை வீடு உள்ளவர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வேண்டும் போன்றவற்றை முக்கிய நிபந்தனையாக வைத்ததாக கூறப்படுகிறது.

முதல்-மந்திரி பதவி

இதேபோல மாநிலத்தில் இழந்த பெரிய அண்ணன் அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும் என்பதில் சிவசேனா குறியாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தல் கூட்டணியை இப்போதே இறுதி செய்ய வேண்டும் என்றும், மராட்டியத்தில் தங்களது கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டு தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இதற்கு உடன்பட்டால் மட்டுமே தேர்தல் கூட்டணி பேச்சை தொடர முடியும் என்று பா.ஜனதாவிடம் சிவசேனா கூறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிகள் தங்களின் மாநிலத்தில் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். எனவே மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்காக பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா விரும்பினால், முதல்-மந்திரி பதவி மாநில கட்சிகளுக்கு தான் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story