மாநகரில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி


மாநகரில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 16 Feb 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

மாநகரில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார்.

திருச்சி, 

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

திருச்சி பொன்னகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு அலுவலகம் தற்போது ஹீபர்ரோட்டில் செசன்ஸ்கோர்ட்டு போலீஸ் நிலையம் அருகே புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு அலுவலகம் செயல்படும்.

இது தவிர, ரூ.10 லட்சம் மதிப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் 3,500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 700 கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் முன்பகுதியில் கேமரா பொருத்தி இருக்கிறார்கள். ஆனால் வீட்டின் பின்பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. திருடர்கள் வீட்டின் பின்பகுதி வழியாக உள்ளே நுழைந்து திருடிவிட்டு செல்கிறார்கள். ஆகவே ஒன்றிரண்டு கேமராக்களை வீட்டின் பின்பகுதியிலும் பொருத்த வேண்டும். காவல்துறையை சேர்ந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.

ஏதேனும் ஒரு அசம்பாவித சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தவுடன் கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தில் போலீசார் அங்கு செல்லும்போது, அங்கு என்ன? நிகழ்கிறது என்பதை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பார்க்க முடியும். ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். சமயபுரம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மாநகர பகுதியில் இருந்து ஆட்டோவை திருடி சென்றது கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால் அவர்களுடைய முகம் தெளிவாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மாநகரில் போக்குவரத்து நெருக்கடி உள்ள இடங்களை கண்காணித்து நெருக்கடியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு அலுவலகத்தை கமிஷனர் அமல்ராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர்களின் வாகனங்களில் புதிதாக ஒளிரும்(லைட்) விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அப்போது போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், போக்குவரத்து உதவி கமிஷனர்கள் விக்னேஷ்வரன், அருணாச்சலம் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story