ஐகோர்ட்டு அனுமதியின் பேரில், 4 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டியது: அரவக்குறிச்சி அருகே சேவல் சண்டை ஆக்ரோஷ மோதல்களை கண்டு பார்வையாளர்கள் ஆரவாரம்


ஐகோர்ட்டு அனுமதியின் பேரில், 4 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டியது: அரவக்குறிச்சி அருகே சேவல் சண்டை ஆக்ரோஷ மோதல்களை கண்டு பார்வையாளர்கள் ஆரவாரம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:00 PM GMT (Updated: 15 Feb 2019 10:29 PM GMT)

ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து அரவக்குறிச்சி அருகே 4 ஆண்டுகளுக்கு பிறகு சேவல் சண்டை போட்டி தொடங்கியது. சேவல்களின் ஆக்ரோஷ மோதல்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ளது பூலாம்வலசு கிராமம். இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு பொழுது போக்கிற்காகவும், பாரம்பரிய சேவல் இனங்களை பாதுகாக்கும் பொருட்டும் வீரவிளையாட்டாக சேவல் சண்டை நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கூட பலர் தங்களது சேவல்களை கொண்டு வந்து சண்டை போடுவதுண்டு. அதுவும் நீண்டகாலமாக பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுவை போல், பூலாம்வலசுவில் சேவல்கட்டு (சேவல் சண்டை) நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பறவைகள் துன்புறுத்தப்படுதல் மற்றும் சில சம்பவங்களை சுட்டி காட்டியும் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சேவல் சண்டை நடத்த மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் பூலாம்வலசுவில் சேவல் சண்டை நிறுத்தப்பட்டது. அப்போதிலிருந்து 4 ஆண்டுகளாக சேவல் சண்டை நடைபெற வில்லை. இதனால் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் களையிழந்ததாக பலரும் கருதினர்.

இந்நிலையில் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசுவை சேர்ந்த முத்துசாமி மகன் ஆனந்தன் சேவல் சண்டை நடத்த மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி கோரினார். அதன்படி சேவல்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, அதன் கால்களில் கத்தி கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பூலாம்வலசுவில் பிப்ரவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் சேவல் சண்டை நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கு சேவல் சண்டை நேற்று தொடங்கியது.

இதையொட்டி சேவல் சண்டை நடத்துவதற்கு ஏதுவாக பூலாம்வலசு குளத்தில் மைதானம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது மூங்கில் கட்டப்பட்டு பார்வையாளர்களுக்கு தனி இடம் அமைக்கப்பட்டது. மேலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு மைதானம் தயாரானது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சண்டை சேவல்களை இங்கு கொண்டு வந்து பதிவு செய்தனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்கும் வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக சேவல் சண்டைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து சேவல்களையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பிறகே மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பூலாம்வலசுவில் சேவல் சண்டை தொடங்கியது.

மைதானத்துக்குள் ஆங்காங்கே இரண்டு சேவல்களை மோதவிட்டு சண்டை நடத்தப்பட்டது. அப்போது சேவல்கள் பறந்து சென்று ஒன்றையொன்று கால், இறக்கை, அலகினால் தாக்கி சண்டையிட்டன.

இதற்கிடையே சண்டையிடும் சேவல்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் அதற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு சேவல் சண்டையிட முடியாத நிலைக்கு சென்றபோது, அது தோல்வியை தழுவி விட்டதாக அறிவிக்கப்பட்டது. சில சேவல்கள், எதிர்தரப்பு சேவலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பறந்து ஓடியதையும் காண முடிந்தது. தோற்றுப்போன சேவலை வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு கொடுத்து விடுகின்றனர். மற்றபடி பரிசுகள் ஏதும் பரிமாறி கொள்ளப்படவில்லை. சேவல் சண்டையில் வெற்றி பெற்றால் அந்த ஆண்டு முழுவதும், தொழில், விவசாயம் அவரது குடும்பத்துக்கு செழித்து ஓங்கும் என்பது ஐதீகம் ஆகும். இதனால் வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அங்கு அரவக்குறிச்சி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேவல் வைத்திருப்பவர்கள் பல்வேறு பரிசோதனைக்கு பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சேவல் சண்டை போட்டிகள் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் இங்கு ரூ.750 முதல் ரூ.5000 வரை விலை போகின்றது. சேவல்களில் செவலை, காகம், கீரி, நூலான், வல்லூரு, மயில், பேடு உள்பட பல வகைகள் உள்ளன. சண்டைச்சேவல்களை தனிக்கவனம் செலுத்தி வளர்க்கின்றனர். கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட சத்தான தானியங்களை உணவாக கொடுத்து வளர்க்கின்றனர். இந்த சேவல் சண்டை நிகழ்ச்சியை பார்வையிட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் வந்து செல்கின்றனர்.

சேவல் சண்டையை பார்ப்பதற்காக கரூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்திருந்ததால் சேவல் சண்டை மைதானம் நிரம்பி வழிந்தது. அப்போது சேவல்கள் பாய்ந்து சென்று மோதுவதை கண்டதும், கைத்தட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். ஆர்வ மிகுதியில் அவர்கள் மைதானத்துக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தடுப்பு வேலியினை தாண்டி யாரும் வருகின்றனரா? என பார்வையாளர்களின் செயல்பாடுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் நீதிமன்ற நிபந்தனைகளை கடைபிடிப்பது தொடர்பாக கரூர் வருவாய்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் போட்டியினை கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

சேவல் சண்டை பற்றி இப்பகுதியை சேர்ந்த சேவல் சண்டை பிரியர்கள் கூறுகையில், சேவல்களை சண்டையில் ஈடுபடுத்த தனிக்கவனம் செலுத்தி வளர்க்கப்படுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றாகும். இது தொன்று தொட்டு நடைபெறுகிறது, என்றனர். 

Next Story