தொல்லியல் துறை விதிமுறைகளை மீறி கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அருகில் கட்டப்படும் ஓட்டல் கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீசு வழங்கப்பட்டது


தொல்லியல் துறை விதிமுறைகளை மீறி கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அருகில் கட்டப்படும் ஓட்டல் கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீசு வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 16 Feb 2019 3:30 AM IST (Updated: 16 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அருகில் தொல்லியல் துறை விதிமுறைகளை மீறி நடந்து வரும் ஓட்டல் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்,

உலக அளவில் தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்குவது பெரிய கோவில் எனப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளை கடந்து உலக அதிசயங்களில் ஒன்றாக கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கோவிலை மாமன்னன் ராஜ ராஜசோழன் கட்டினார். அவரது மகனான ராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்து உள்ளது.

கடாரம் கொண்டான் என்ற பெருமைக்குரிய ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து சென்று வடநாட்டு மன்னர்களை வீழ்த்தி பெற்ற வெற்றியை கொண்டாடுவதற்காக கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி அங்கு இந்த கோவிலையும் அமைத்தார் என்பது வரலாறாகும். கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பாரம்பரிய நினைவு சின்னங்கள் மற்றும் சர்வதேச கலாசாரங்களை பாதுகாத்து வரும் ‘யுனெஸ்கோ’ அமைப்பின் பட்டியலிலும் இந்த கோவில் இடம் பெற்று உள்ளது.

தொல்லியல் துறை விதிமுறைப்படி இதுபோன்ற பழங்கால பாரம்பரிய நினைவு சின்னங்களின் அருகில் 100 மீட்டர் சுற்றளவிற்குள் எந்த கட்டிடமும் கட்டப்படக்கூடாது என்பது சட்டமாகும். தொல்லியல் துறை சட்டம் 1958-ன்படி இந்த விதிமுறைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 74 மீட்டர் சுற்றளவிற்குள் சிதம்பரம்-திருச்சி மெயின் ரோட்டின் அருகில் ஒரு ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கான அடித்தள பணிகள் முடிவடைந்து கட்டிடத்தை மேலே எழுப்புவதற்கான செங்கல் கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. இந்த ஓட்டல் கட்டப்பட்டால் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மறைக்கப்படும் என்பது பக்தர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

தொல்லியல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் இந்த ஓட்டல் கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் மீது தொல்லியல் சட்டம் பிரிவு 19-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி கங்கை கொண்ட சோழபுரத்தை சேர்ந்த இயற்கை வள பாதுகாப்பாளர்கள் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர். மேலும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தஞ்சாவூரில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் மண்டல அதிகாரிகளிடமும் மனு கொடுத்து உள்ளனர். இதன் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளருக்கு கட்டுமான பணிகளை உடனே நிறுத்தும்படி தொல்லியல் துறை அதிகாரிகள் நோட்டீசு வழங்கி உள்ளனர்.

இதுதவிர இந்த கட்டுமான பணிக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி கங்கை கொண்ட சோழபுரத்தை சேர்ந்த செந்தில் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story