சிவகாசி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்கள்


சிவகாசி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்கள்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:15 AM IST (Updated: 16 Feb 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கியது அருப்புக்கோட்டை கலால் வட்டம். இதேபோல் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கியது சிவகாசி கலால் வட்டம். இதில் சிவகாசி கலால் வட்டத்தில் மட்டும் 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் அருகிலேயே டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் பார்களுக்கு அரசு சார்பில் உரிய கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு டாஸ்மாக் பாருக்கும் கட்டண தொகை மாறுபடும். இந்த நிலையில் சிவகாசியில் உள்ள 41 டாஸ்மாக் பார்களில் 50 சதவீதத்துக்கு மேல் உள்ள பார்கள் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார்கள் தெரிவித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பார்களுக்கு சென்று உரிய ஆய்வு செய்வது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு பாரில் இருந்தும் மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் என்றால் ஒரு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் பார் கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதேபோல் 20 டாஸ்மாக் பார்களில் இருந்து மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. சிவகாசி தாலுகாவில் மட்டும் ரூ.2 கோடி இழப்பு என்றால் மற்ற தாலுகாவில் உள்ள டாஸ்மாக் பார்களில் இருந்தும் முறையாக அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் தற்போது வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் எத்தனை? இதில் அரசு அனுமதி பெற்று இயங்கும் டாஸ்மாக் பார்கள் எத்தனை? அனுமதி பெறாமல் இயங்கும் பார்கள் எத்தனை என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி இல்லாமல் இயங்கும் பார்களை உடனே பூட்ட வேண்டும். அல்லது அவர்களிடம் உரிய கட்டணத்தை வட்டியுடன் வசூலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி பகுதியில் எவ்வித அரசு அனுமதியின்றி இயங்கும் பல பார்கள் 24 மணி நேரமும் மதுபாட்டில்களை சப்ளை செய்து கொண்டு இருக்கிறது. இதை கண்டிக்க வேண்டியவர்களும், தண்டிக்க வேண்டியவர்களும் மவுனமாக இருக்கிறார்கள். அரசுக்கு முறையாக வர வேண்டிய வருமானத்தை தடுக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story