அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சத்திரப்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதி, தெரு விளக்குகள், பஸ் வசதி செய்துதரக்கோரியும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், முருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் சிங்கப்புலி, அண்ணாவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறும்போது, நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும், கிராமங்கள் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்திருந்தனர். அதனை நிறைவேற்றவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் தொடர் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவை நடைபெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது மாற்றுத்திறனாளி குருவையா என்பவர் மூன்று சக்கர வாகனம் வேண்டி மனு அளித்தார். அதற்கு எம்.எல்.ஏ., ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.