தஞ்சையில் 2,961 பேருக்கு ரூ.2 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்


தஞ்சையில் 2,961 பேருக்கு ரூ.2 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:15 AM IST (Updated: 16 Feb 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 2,961 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றுமாலை நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம் வரவேற்றார்.

இதில் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து பேசும்போது, ஏழை–எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் த £ன் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்தொடர்ச்சியாக ஒரு நபருக்கு 50 கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோழி குஞ்சுகளை வளர்க்க கூண்டுகளும் வழங்கப்படுகிறது. கிராமமக்கள் பயன்பெறும் வகையில் கவனத்துடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.54 கோடி வந்துள்ளது. முதல்கட்டமாக 3 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 1 வாரத்தில் தொடங்கப்படும் என்றார்.


விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு 2,961 பேருக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரத்து 696 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பெண்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பசுமாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். கோழி குஞ்சு வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து தற்போது தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர கோழி வளர்ப்பு உதவி கரமாக இருக்கும். தமிழகஅரசின் எந்த திட்டமாக இருந்தாலும் தாய்மார்களை சென்றடையும் வகையில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். நலத்திட்ட உதவிகளை பெறும் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதுடன், இந்த ஆட்சிக்கு என்றைக்கும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனஸ்ரீ முதலிடம் பெற்றார். அவரை அமைச்சர் துரைக்கண்ணு, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வாழ்த்தினர்.

முடிவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

Next Story