செங்கிப்பட்டி அருகே கோஷ்டி மோதல்; வாலிபர் மண்டை உடைந்தது 6 பேர் கைது


செங்கிப்பட்டி அருகே கோஷ்டி மோதல்; வாலிபர் மண்டை உடைந்தது 6 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2019 3:45 AM IST (Updated: 17 Feb 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

செங்கிப்பட்டி அருகே குடும்ப தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வாலிபரின் மண்டை உடைந்தது. இந்த மோதல் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார்(வயது 55). இவருக்கும், இவருடைய மகன் ஹரிஹரன்(25) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தகராறில் சண்டை ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை அருகில் வசித்து வந்த ரமேஷ்குமாரின் தம்பி மகன் விக்னேஷ் வயது(23) என்பவர் தடுத்துள்ளார்.

அப்போது சண்டையை தடுக்க வந்த விக்னேஷ்சையும் தாக்கினர். இதையறிந்த விக்னேஷின் நண்பர்களான செங்கிப்பட்டியை சேர்ந்த கவியரசன்(23), விக்னேஷ்(23), மற்றொரு விக்னேஷ்(22), குமரேசன் ஆகிய நால்வரும் ரமேஷ் குமாரின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளனர்.

அப்போது ரமேஷ்குமாரின் தம்பிகளான குபேந்திரன்(48), செல்வேந்திரன்(42) மற்றும் ரமேஷ்குமாரின் தம்பி மகனான தமிழ்பாரதி(23) ஆகியோர் கவியரசனை தாக்கி உள்ளனர். இதில் கவியரசனுக்கு மண்டை உடைந்தது. இதனையடுத்து நேற்று காலை செங்கிப்பட்டியில் உள்ள குளத்திற்கு வந்த ரமேஷ்குமாரை கவியரசன், விக்னேஷ், மற்றொரு விக்னேஷ், குமரேசன் ஆகிய நால்வரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ்குமாரின் தம்பி மகனான தமிழ்பாரதி (25) சண்டையை தடுத்து உள்ளார். இதில் தமிழ்பாரதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தமிழ்பாரதியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து செங்கிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ், இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமார், விக்னேஷ், செல்வேந்திரன், கவியரசன், மற்றொரு விக்னேஷ், குமரேசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Next Story