பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி


பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2019 4:45 AM IST (Updated: 17 Feb 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

புதுக்கோட்டை,

ராணுவ வீரர்களின் உயிர்கள் விலைமதிப்பற்றது. இருந்தாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு மற்ற மாநிலத்தில் வழங்கியுள்ள இழப்பீடு தொகையை போல தமிழக அரசும் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாக்குதலை, இந்திய ராணுவத்தின் மீது நடத்தி உள்ளனர். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களை நடத்தி இந்தியாவையோ, ராணுவத்தினரையோ, இந்திய மக்களையோ அச்சுறுத்த முடியாது. தேர்தல் கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்து நகைச்சுவையான கருத்து. அந்த கருத்தில் உண்மை இருந்தாலும், அதை திரித்து எடுத்து கொள்ளக்கூடாது. காங்கிரஸ் கட்சியில் தொடர்ச்சியாக 2½ ஆண்டுகளாக தலைவராக இருந்ததே சாதனைதான். 2 முறை எனக்கு தமிழக தலைவராக இருக்க பதவி கொடுத்த ராகுல்காந்திக்கு தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் உரிமை உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் தான். ராகுல்காந்தி தேர்தலில் போட்டியிட கூறினால் நான் போட்டி யிடுவேன்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் நிலை ஏற்படும். ஆட்சி மாற்றம் வரலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்-அமைச்சரிடம், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பெடி தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல் படுகிறார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும்.

இதற்கு மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். மத்தியில் ராகுல்காந்தியையும், மாநிலத்தில் ஸ்டாலினையும் ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் தான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற முடியும். நிபந்தனைகளுடன் வரும் கட்சிகள் கூட்டணியில் இடம்பெற முடியாது. இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story