த.மா.கா.வுக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு கூட்டணி திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி
த.மா.கா.வுக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு கூட்டணி என்று திருப்பூரில் ஜி.கே.வாசன் கூறினார்.
திருப்பூர்,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருப்பூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் உள்பட 40–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினரை த.மா.கா. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். நானும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். இந்த சம்பவத்துக்கு இந்திய நாடு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். காலம் நெருங்கி விட்டது. இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஆதரவு தெரிவிக்க தயார் நிலையில் உள்ளனர்.
வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிதி உதவியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப கட்சிகள் ஆட்சியை பிடிக்கும். மக்கள் கையில் தான் வாக்கு என்ற துருப்புச்சீட்டு உள்ளது. மக்கள் விருப்பம் தான் இறுதி விருப்பம். அவர்கள் தான் எஜமானர்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒருமித்த எண்ணம் கொண்டவர்களுடன் த.மா.கா. கூட்டணி அமைக்கும். மக்களுடைய மனநிலை, தொண்டர்களுடைய கருத்து, தலைவர்களுடைய எண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். த.மா.கா. கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் தனித்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. த.மா.கா.வின் பலத்துக்கு ஏற்றவாறு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் கட்சியில் உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
பா.ஜனதா அரசு நிறைய திட்டங்களை கொடுத்துள்ளார்கள். பல திட்டங்கள் நிலுவையில் இருக்கிறது. மக்கள் மனநிலையை பொருத்துத்தான் வெற்றி அமையும். இந்திய மக்கள் ஒருமித்த கருத்தோடு குரல் கொடுக்கக்கூடிய நேரம் வந்துள்ளது. தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய நேரம். அரசியல் பேசுவதற்கான நேரம் இது இல்லை. ஒன்றுகூடி செயல்பட்டு தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தை இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் எடுக்கக்கூடிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்படும் கட்டாயம் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடையவர்கள் கூட்டணி அமைப்பார்கள். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை அதிகப்படுத்த வேண்டும். உள்நாட்டு பனியன் வர்த்தகத்துக்கான ஜி.எஸ்.டி. யை குறைக்க வேண்டும். பனியன் துறைக்கு உள்நாட்டு சந்தை வசதியை ஏற்படுத்த வேண்டும். திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவமனை கூடுதல் படுக்கைகளுடன் கட்ட வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கவர்னர், துணை நிலை கவர்னர். ஒரு மாநில முதல்–அமைச்சருக்கும், கவர்னருக்கும் பிரச்சினை இருக்கும்போது உள்துறை அமைச்சகம் உண்மை நிலையை விசாரித்து செயல்பட வேண்டும். அந்த மாநில மக்களின் எண்ணமும் அதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.