காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு கரூரில் பல்வேறு அமைப்பினர்-பொதுமக்கள் அஞ்சலி


காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு கரூரில் பல்வேறு அமைப்பினர்-பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு கரூரில் பல்வேறு அமைப் பினர்- பொதுமக்கள்அஞ்சலி செலுத்தினர். மேலும் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

கரூர்,

காஷ்மீரில் ராணுவவீரர்கள் பயணம் செய்த பஸ் மீது, குண்டுகள் தாங்கிய காரினை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மோத செய்து வெடிக்க செய்ததில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கும் வகையில் இருந்தது. இதற்கு மத்திய அரசு தக்க பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். தூத்துக்குடி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ராணுவவீரர்கள் அந்த தாக்குதலில் இறந்திருப்பதால் தமிழகமே சோக கடலில் மூழ்கியது. இறந்தவர்களுக்கு ஆங்காங்கே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் கரூர் லைட்-அவுஸ் கார்னர் பெரியார் சிலை அருகே சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் சண்முகம், வக்கீல் ராஜேந்திரன், குணசேகரன் உள்பட பொதுமக்கள் பலர், இறந்த ராணுவவீரர்களின் உருவப்படத்தில் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ராணுவவீரர்கள் சிந்திய குருதி தேசத்தின் உறுதியை பிரதிபலிக்கிறது... வாழ்க போர்வீரன்... என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதே போல், கரூர் கோர்ட்டு முன்பு வழக்கறிஞர்கள் ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே தீரன் சின்னமலை பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து தேசத்திற்காக உயிர்நீத்த ராணுவவீரர்களுக்கு மவுனஅஞ்சலி செலுத்தினர். இதே போல், கரூர் மாவட்டம் முழுவதும் முக்கிய வீதிகள், தெருக்களில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், கட்சியினர் உள்ளிட்டோர் ஏற்பாட்டின் பேரில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேபோல் கரூர் அருகே ஐந்துரோட்டில் உள்ள கோடீஸ்வரர் கோவிலில் 40 அகல்விளக்குளை கொண்டு மோட்ச தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது தேசியகொடி அங்கு பறக்கவிடப்பட்டிருந்தது. ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பான பதாகை அங்கு வைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரையிலான பக்தர்கள் பலர் மோட்ச தீபத்தை தொட்டு வணங்கி, ராணுவ வீரர்களின் புகழ் ஓங்கட்டும்... என கூறி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், இந்துமுன்னணி நிர்வாகி சரவணன் உள்பட இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். 

Next Story