மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்: மத்திய– மாநில அரசுகளை அகற்ற பாடுபடுவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மதுரை மாநாட்டில் தீர்மானம்
மத்திய, மாநில அரசுகளை அகற்றி, மதசார்பற்ற ஆட்சி அமைய பாடுபடுவோம் என்று மதுரையில் நேற்று நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை ஒத்தக்கடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கோதர் மைதீன், அதிரை நஸ்ருதீன், துணைச் செயலாளர்கள் முகமது இஸ்மாயில், ஜபருல்லா, இப்ராகிம் மக்கி, அக்பர் அலி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் இக்பால் பாஷா, வடக்கு மாவட்ட செயலாளர் ஜாகீர்உசேன், அகில இந்திய பொது செயலாளர் குஞ்ஞாலி குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநாட்டில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் டெல்லி குர்ரம்அனீஸ் உள்ளிட்டோர் பேசினர்.
தீர்மானங்களை மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும், மாநில செயலாளருமான அப்துல் பாசித் முன்மொழிந்து பேசினார். மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் வழிமொழிந்து பேசினர். பின்னர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:–
மத்திய ஆளும் பா.ஜ.க. அரசு சிறுபான்மையினருக்கும், ஆதிதிராவிட சமுதாயத்தினருக்கும் அநீதி இழைத்து வருகிறது. அவசர கோலத்தில் சட்டங்களை திணித்து ஜனநாயகத்தின் குரலை அடக்கி வருகிறது. விவசாயிகள், வியாபாரிகள் என பலதரப்பு மக்களும் பணப்புழக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதால் மாநில சுயாட்சி கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசு கண்டுகொள்வது கிடையாது. சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் என நாட்டின் உயர்ந்த நிறுவனங்களில் மத்திய அரசின் தலையீட்டால் இந்திய நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். சமூகநீதிக்கு எதிராக பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை மத்திய அரசு புறக்கணித்து, வஞ்சித்து வருகிறது. அதனை அ.தி.மு.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. எனவே எல்லா நிலைகளிலும் மக்களுக்கு விரோதமாக இருக்கும் பா.ஜ.க. ஆட்சியை அகற்ற வேண்டும். அதேபோன்று தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்பட்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி ஆட்சியும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சியும் அமைய வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில துணைத்தலைவர் ஷபிகுர் ரகுமான் திருக்குரான் வசனங்களை ஓதினார். மாநில செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் தொகுத்து பேசினார். முடிவில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மொய்தீன் நன்றி கூறினார். திரளானவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.