தமிழ் சங்க பொன்விழா மாநாடு: தமிழுக்கும்,தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் நாராயணசாமி உறுதி
தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும் என்று தமிழ் சங்க பொன்விழா மாநாட்டில் முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி தமிழ் சங்கத்தின் பொன்விழா மாநாடு லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் நேற்று காலை தொடங்கியது. இதன் தொடக்க விழாவிற்கு தமிழ்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
கம்பன் கழக தலைவர் கோவிந்தசாமி முதலியார் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு மாநாட்டு மலர் மற்றும் பல்வேறு நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை மாநிலத்தில் தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் நமது அரசு உரிய மரியாதை செலுத்தி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் கருதி தற்போது நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்றால் இதன் மூலம் அரசு தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.
புதுவை மாநிலத்தில் அரசின் திட்டங்களை நிறைவேற்ற பல்வேறு தடைகள் உள்ளன. அதனை தகர்த்தெரியும் காலம் தற்போது வந்துள்ளது. அரசு தமிழ் அறிஞர்களுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. சமீபத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்தார். அவரது உடல் அடக்கத்திற்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு எழுத்தாளருக்கு புதுவையில் தான் மரியாதை செலுத்தப்பட்டது.
மாகியை சேர்ந்த மறைந்த எழுத்தாளர் முகுந்தனுக்கும் புதுவை அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும். தமிழுக்காகவும், தமிழ் அறிஞர்களுக்காகவும் தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் சிவா, அனந்தராமன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், டெல்லி தமிழ்சங்க பொதுச்செயலாளர் முகுந்தன், சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா, கொழும்பு தமிழ்சங்க தலைவர் குலதிலகராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மாநாட்டு மலர் மற்றும் பல்வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டார். இந்த மாநாட்டில் நேற்று பல்வேறு அரங்கங்கள் நடந்தது. மாநாட்டின் நிறைவு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற உள்ளது.