கிரண்பெடியை விரட்டும் வரை போராட்டம் தொடரும் அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்


கிரண்பெடியை விரட்டும் வரை போராட்டம் தொடரும் அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:10 PM GMT (Updated: 16 Feb 2019 11:10 PM GMT)

புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பெடியை விரட்டும் வரை போராட்டம் தொடரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசமாக கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநில கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் சர்வாதிகாரியாக மக்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் அறவழியில், காந்தியவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். இது முடிவல்ல. தொடக்கம் தான்.

மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் கவர்னர் கிரண்பெடியால் புதுவை மாநில வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறார். கடந்த 2½ ஆண்டுகளாக இல்லாமல் தற்போது அரசியலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

புதுவை மாநில கவர்னராக கிரண்பெடி என்று பொறுப்பேற்றாரோ அன்று முதல் போராடி வருகிறோம். சட்டரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தோற்றுப் போனதால் தான் தற்போது ரோட்டிற்கு வந்து போராட்டம் நடத்துகிறோம்.

இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பரிசு பொருட்கள், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் என எதையும் செயல்படுத்த அனுமதி தரவில்லை. மில் தொழிலாளர்களுக்கு 5 மாத சம்பளம் கேட்டோம். மில்லை மூடிவிட்டு வாருங்கள் என்றார். இனியும் பொறுக்க முடியாது என்பதால் தான் போராட்டத்தினை தொடங்கினோம்.

டெல்லியில் முதல்–மந்திரி வேட்பாளராக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். அங்கு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அவர் புதுவைக்கு வந்து அரசுக்கு தொல்லை கொடுக்கிறார். கவர்னரை புதுவையில் இருந்து விரட்டும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story