காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு


காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 17 Feb 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல் பொம்மஅள்ளி எம்.ஜி. ஆர். நகர் மேட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (32). பெட்டிக்கடைக்காரர். நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் இவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.28,500 திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் 2 பேரும் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரூர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் திரு.வி.க. நகரில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை கண்ணன், அவருடைய மனைவி ஜீவா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டனர். மதியம் சாப்பிடுவதற்காக அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 6 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கண்ணன் அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story