அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப்புகளால் விபத்து அபாயம்


அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப்புகளால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 5:54 PM GMT)

அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம், 

கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயக்கப்படுகின்றன. இதில் கேரளாவில் உள்ள குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் மற்றும் காபி தோட்டங் களுக்கு ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்களை ஏற்றி செல்கின்றனர்.

அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு ஜீப்புகள் கம்பம்மெட்டு மலைப்பாதையில் அசுர வேகத்தில் போட்டி போட்டு செல்கின்றன. மலைப்பாதையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் ஜீப்புகள் அதிக வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதில் பலர் உயிரிழந்ததுடன் ஒரு சிலர் கை, கால்களையும் இழந்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் போலீசார் சோதனையை பலப்படுத்தி டிரைவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில தினங் களில் ஜீப் டிரைவர்கள் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு செல்கின்றனர். இதையறிந்த போலீசார் திடீரென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் ஜீப் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். வாகன தணிக்கையில் இருந்து தப்பிக்க ஜீப் டிரைவர்கள் தோட்டத்தொழிலாளர்களை மலைப்பாதையில் இறக்கி விட்டு வந்து விடுகின்றனர்.

பின்னர் போலீசாரை கடந்து சென்று, மீண்டும் ஏற்றி செல்கின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறும் டிரைவர்களுக்கு தகுந்த ஆலோசனை கூட்டத்தை போக்குவரத்துத்துறை அதிகாரிகள், போலீசார் நடத்த வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கும் ஜீப்புகளில் ஏறி செல்லும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story