சேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது


சேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்துச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் அன்னதானப்பட்டி அகத்தியர் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி அலமேலு (வயது 65). இவர் சம்பவத்தன்று அல்லிக்குட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 4 பேர் வந்தனர். திடீரென்று அவர்கள் மூதாட்டியை வழிமறித்தனர்.

பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் கைப்பையில் வைத்திருந்த ரூ.600 ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து அலமேலு, அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் 4 பேரையும் தேடி வந்தார்.

இந்த நிலையில் பிரபல ரவுடிகளான அன்னதானப்பட்டி சண்முகாநகரை சேர்ந்த விஜி (33), சண்முகம் (30), ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முரளிதரன் (37) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையொட்டி 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story