வலங்கைமான் வைத்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


வலங்கைமான் வைத்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:15 PM GMT (Updated: 17 Feb 2019 7:04 PM GMT)

வலங்கைமான் வைத்தீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்,

வலங்கைமானில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி, வைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டம் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

பழுதடைந்திருந்த இந்த கோவில் சீரமைக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவிலில் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிதாக மரச்சிற்ப வேலைகளுடன் கூடிய தேர் செய்யப்பட்டது. புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக விநாயகர், தையல்நாயகி, வைத்தீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தேர் வெள்ளோட்டம் கோவில் வாசலில் தொடங்கி கீழஅக்ரஹாரம், தெற்கு, மேற்கு, வடக்கு அக்ரஹார தெரு வழியாக மீண்டும் கோவில் நிலையை அடைந்தது. வலங்கைமான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது வழிநெடுகிலும் இருந்த மக்கள் தேங்காய் உடைத்து தேரில் இருந்த சாமியை வழிபட்டனர்.

Next Story