அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஈரோட்டில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஈரோட்டில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

ஈரோடு,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமாரின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று ஈரோட்டுக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்த நாடு தலை வணங்குகிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிக்காத நிலையில் த.மா.கா. நிலைப்பாட்டை தற்போது கூற இயலாது. மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுகின்ற, எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சியுடன் எங்கள் கூட்டணி இருக்கும். கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்போம்.

அத்திக்கடவு–அவினாசி திட்டம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டம் என்பதால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையின் மூலம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறார். மக்களுக்கு கொடுக்கக்கூடிய ரூ.2 ஆயிரத்தை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

அப்போது அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story