பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க ஆசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் துணைவேந்தர் பேச்சு


பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க ஆசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 8:14 PM GMT)

பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க ஆசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணைவேந்தர் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த ஆராய்ச்சி எழுத்துமுறை என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பயிற்சிப்பட்டறையை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:– ஆசிரியர்கள் தங்களது பாடம் சார்ந்த அறிவை புதுப்பித்துக் கொள்வது முக்கியம். அவ்வாறு இல்லையெனில் போட்டிகள் மிகுந்த இந்த உலகில் ஒரு நிலையான இடத்தை அடைய முடியாது. ஆராய்ச்சி என்பது ஓர் அர்ப்பணிப்பாகும். ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் எப்பொழுதுமே ஒரு நல்ல ஆசிரியராக இருப்பார். ஆராய்ச்சியும், கற்பித்தலும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடங்களில் ஆழமான அறிவையும், தங்களது பொறுப்பையும் உணர வேண்டும். தரமான ஆராய்ச்சி கட்டுரைகள் ஆராய்ச்சியாளரின் மதிப்பை உயர்த்துவதோடு, அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தின் தரத்தையும் உணர்த்தும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கதிரேசன், இணைப் பேராசிரியர் சாதிக் பாட்சா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பேராசிரியர் கருத்தபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அழகப்பா பல்கலைக்கழக தொழில்நுட்ப மற்றும் கல்விசார் எழுத்துப் பயிற்சி மைய இணை ஒருங்கிணைப்பாளர் மதன் நன்றி கூறினார்.


Next Story