கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Feb 2019 11:30 PM GMT (Updated: 17 Feb 2019 9:05 PM GMT)

கவர்னர் கிரண் பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது தர்ணா போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.

இந்த போராட்டத்துக்கு தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் கிரண்பெடி மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் சர்வாதிகாரத்தனமாக செயல்படுகிறார்.

மக்கள் நலத்திட்ட கோப்புகளுக்கு கையெழுத்துபோடாமல் உள்ளார். 5 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கும் நிலையிலும் மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனநாயகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் இதுபோன்று கவர்னர்கள் மூலம் இப்படி செய்கிறார்கள்.

அவர்களுக்கு திராணி இருந்தால் மக்களை சந்தித்து தேர்தல் மூலம் ஆட்சிக்கு வரவேண்டும். அவ்வாறு முடியாததால் கவர்னர் மூலம் கேவலமான முறையை ஏற்படுத்தி உள்ளனர். புதுவை போலீஸ் ராஜ்ஜியம்போல் உள்ளது. கிரண்பெடி டெல்லியில் போலீஸ் கமிஷனராக இருக்கும்போது திறமையாக பணியாற்றி இருக்கலாம். அவர் பாரதீய ஜனதாவின் கட்டளைக்கு அடிபணிந்து காரியம் ஆற்றி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறார்.

மத்திய அரசு இந்த பிரச்சினையை கவனிக்காதது வெட்கக்கேடானது. இதனை தி.மு.க. சார்பில் கண்டிக்கிறோம். சுருக்கமாக சொல்லப்போனால் டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி என்ற யானை கண்ணாடிப்புதூர் என்ற கிராமத்துக்குள் புகுந்தது. அது தனது வழித்தடத்தை கைப்பற்ற வந்தது. ஆனால் அதனை பிடித்து மீண்டும் டாப்சிலிப்பில் கொண்டு விட்டுள்ளனர்.

அதேபோல் புதுவை கவர்னரையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இதை கவர்னரை கொச்சைப்படுத்தவேண்டும் என்பதற்காகவோ, விமர்சனத்துக்காகவோ கூறவில்லை. மக்கள் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். கவர்னர் கிரண்பெடி வந்தது முதல் இன்றுவரை அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலினுடன் தமிழக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி மற்றும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Next Story