மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு


மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 9:14 PM GMT)

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்தது. அவர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. பெண்களின் சபரிமலை என்றும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் மாசி திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கிடையே மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கேரள பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மண்டைக்காடு கோவில் பரபரப்புடன் காட்சி அளித்தது. கேரள பெண்கள் அதிகமாக வந்திருந்ததை காண முடிந்தது.

இதனையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனையும், மதியம் சிறப்பு பூஜையும், அன்னதானமும், மாலையில் சாயரட்சையும், இரவில் அத்தாள பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காலையில் ஏராளமான பெண்கள் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், என்ஜினீயர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story