திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் யோகா, இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார்
யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு தொடக்க விழா திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
திருமங்கலம்,
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு புதிய மருத்துவ பிரிவை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் அ.தி.மு.க. திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், அவைத்தலைவர் ஜஹாங்கீர், நகர செயலாளர் விஜயன், ஆண்டிச்சாமி, தலைமை டாக்டர் பூமிநாதன், டாக்டர் ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, எந்த அரசு தண்ணீர் தருகிறதோ அதனை ஆதரியுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். வறட்சியிலும் சரியான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்தி தேர்தல் மேலாண்மை துறையில் இருந்து குடிநீருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்துள்ளார். தடையில்லா மின்சாரம், தண்ணீர் வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் நீர் கிடைக்கிறதோ அந்த இடங்களை தூர்வாரி பல்வேறு வழிகளில் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே ரஜினியின் கருத்து அ.தி.மு.க.விற்கு ஆதரவாக உள்ளது. தி.மு.க.வை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். டி.டி.வி.தினகரன் வேனில் தினமும் சுற்றிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவார். நாங்கள் கோட்டைக்கு சென்று விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.