கோவை பீளமேடு-இருகூர் இடையே 2 ரெயில்கள் மீது கல்வீச்சு


கோவை பீளமேடு-இருகூர் இடையே 2 ரெயில்கள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 7:30 PM GMT)

கோவை பீளமேடு-இருகூர் இடையே 2 ரெயில்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவையில் இருந்து புறப்பட்டு செல்லும் ரெயில்கள் மீது சமீபகாலமாக கல்வீசும் சம்பவங்கள் அதி கரித்து வருகிறது. இரவு நேரம் மட்டுமல்லாமல் பகலிலும் ரெயில் மீது கல்வீசுவது அதிகரித்து உள்ளது. இதை தடுக்க ரெயில் தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். அப்படி இருந்தும் ரெயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து சென்னைக்கு சதாப்தி ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த ரெயில் மதியம் 3.20 மணியளவில் பீளமேடு-இருகூர் இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது மர்மநபர்கள் சிலர் ரெயில் மீது கல்வீசினார்கள். இதில் அந்த ரெயிலின் இ-1 என்ற குளிர்சாதன பெட்டியில் கண்ணாடி உடைந்து சிதறியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேபோல நேற்று முன்தினம் மதியம் சென்னை நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மீதும் பீளமேடு அருகே மர்ம நபர்கள் கல் வீசினார்கள். ஆனால் ரெயில் பெட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 2 ரெயில்கள் மீது அடுத்தடுத்து கல்வீசிய சம்பவம் குறித்து கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் ரெயில் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடப்பதை தடுக்க பீளமேடு-இருகூர் இடையே ரெயில்வே போலீசார் சாதாரண உடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

Next Story