தஞ்சை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின; சேவைகள் பாதிப்பு


தஞ்சை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின; சேவைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 4:15 AM IST (Updated: 19 Feb 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின. சேவைகள் பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூர்,

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். தஞ்சை மேரீஸ்கார்னர், பாலாஜிநகரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ஒரு சிலரை தவிர அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சேவைகளும் பாதிக்கப்பட்டன.

அலுவலக நுழைவு கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அதிகாரிகள், ஊழியர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு 15 சதவீத நிர்ணய பலனுடன் 3 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.

4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் எனபன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் என 600 பேர் உள்ளனர். இவர்களில் 450 பேர் பணிக்கு செல்லவில்லை. இந்த போராட்டத்தினால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

சில இடங்களில் தொலைபேசி பழுது ஏற்பட்டது. அதை சரி செய்ய ஊழியர்கள் யாரும் இல்லாததால் பலர் அவதிப்பட்டனர். இந்த போராட்டம் நாளை(புதன்கிழமை) 20-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story