பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அதிகாரிகள் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அதிகாரிகள் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன
x
தினத்தந்தி 19 Feb 2019 4:30 AM IST (Updated: 19 Feb 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தது.

அரியலூர்,

15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தின் முன்மொழிவின்படி 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.1.2017 முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்.யின் நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் நேற்று நாடு முழுவதும் தொடங்கியது.

இதனால் நேற்று பெரம்பலூரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவை, தொலைபேசி, செல்போனுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர். மேலும் அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டது.

இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் அரியலூர் கல்லூரி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு நேற்று ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு வராததால் மூடப்பட்டிருந்தது. வேலை நிறுத்த போராட்டத்தால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் சேவைகளில் குறைகள் ஏற்பட்டது. 

Next Story