கோம்பையில், செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் கோரிக்கை மனு


கோம்பையில், செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 8:39 PM GMT)

கோம்பையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.

இதில், கோம்பை பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘கோம்பையில் அதிக கதிர்வீச்சு கொண்ட தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதனால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த செல்போன் கோபுரத்தை ஊருக்கு வெளியே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

தேனி அருகே உள்ள சோலைத்தேவன்பட்டி வடக்கு தெரு காலனியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் அளித்த மனுவில், ‘நாங்கள் வசித்து வரும் காலனி பகுதியில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. குடிநீருக்காக பொது குழாய் அமைக்கக்கோரி பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. இங்கு பெண்களுக்கு பொது கழிப்பிட வசதியும் இல்லை. எனவே, இங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

தேவாரம் அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அளித்த மனுவில், ‘தம்மிநாயக்கன்பட்டி, தெற்குப்பட்டி, குப்பானாசாரிபட்டி பகுதிகளை சேர்ந்த நாங்கள் தினக்கூலி வேலை செய்து வருகிறோம். தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை பெற உண்மையான, வறுமையில் வாடும் எங்களுக்கு முறையான விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பங்களும் உதவி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

உப்புக்கோட்டை அருகே உள்ள காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலில் வழிபட்டு வருகிறோம். இந்நிலையில் சிலர் இந்த கோவிலை இடிக்க வேண்டும், கோவில் நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story