ரூ.2 ஆயிரம் உதவித்தொகைக்கான பயனாளிகள் தேர்வில் முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில், கிராம மக்கள் புகார்


ரூ.2 ஆயிரம் உதவித்தொகைக்கான பயனாளிகள் தேர்வில் முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில், கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 9:29 PM GMT)

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல், 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ரவி தலைமையில், பி.கொசவபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் கோஷமிட்டபடி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், பி.கொசவபட்டியில் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். ஆனால், அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்காமல், வசதி படைத்தவர்களை சேர்த்துள்ளனர். எனவே, முறையாக கணக்கெடுப்பு நடத்தி உண்மையான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை அரசு சலுகைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதேபோல் வடமதுரை ஒன்றியம் காணப்பாடி கிராம மக்கள் கொடுத்த மனுவில், முதல்-அமைச்சரின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் காணப்பாடியில் முறைகேடு நடக்கிறது. ஏழை மக்களின் பெயர்கள் பயனாளிகளின் பட்டியலில் இல்லை. வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகளின் செல்வாக்கு பெற்றவர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே, முறைகேடுகளை தடுத்து உண்மையான பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அடியனூத்து அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர். அவர்கள் கூறுகையில், அடியனூத்து முகாமில் 190 குடும்பத்தினர் வசிக்கிறோம். இதில் பல குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையில் வசிக்கின்றனர். எனவே, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை முதல்- அமைச்சர் எங்களுக்கும் வழங்க வேண்டும், என்றனர்.

இதேபோல் நத்தம் அருகேயுள்ள பண்ணுவார்பட்டி, முசுவனூத்து மற்றும் எம்.வாடிப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவரையும் சேர்க்க வேண்டும். இதற்காக விடுபட்டவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும், என்று கூறி மனு கொடுத்தனர்.

சாணார்பட்டி அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியை அடுத்த மூரிமீனாட்சிபுரம் கிராம மக்கள், குளக்கரையில் இருக்கும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், மூரி மீனாட்சிபுரத்தில் மணியக் குளத்தின் கரையில் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக கூறி வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே, வீடுகளை இடிக்கக் கூடாது, என்றனர்.

நத்தம் அருகேயுள்ள ஒத்தக்கடை கிராம மக்கள், வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், நான்கு வழிச்சாலைக்காக எங்கள் பகுதியில் உள்ள 30 வீடுகளை இடிக்க போவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வீடுகளை இடித்து விட்டால் 30 குடும்பத்தினரும் பெரும் சிரமம் அடைவோம். எனவே, வீடுகளை இடிக்கக் கூடாது, என்றனர்.

ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள கொத்தப்புள்ளி விவசாயிகள் கொடுத்த மனுவில், கொத்தப்புள்ளி கொட்டியம்மன் குளத்தின் வடிகால் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டி கிராம மக்கள் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், கூலித்தொழிலாளர்களான நாங்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். கூலி வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தவே சிரமமாக இருக்கிறது. எனவே, எங்களுக்கு அரசு இலவசமாக வீட்டு மனை வழங்க வேண்டும், என்றனர்.

தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டி, கீழக்கோட்டை, சாமியார்பட்டி, மேலக்கோட்டை, புதுக்கோட்டை கிராமங்களில் வசிக்கும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 142 குடும்பத்தினர் வாடகை வீடுகளில் மிகுந்த சிரமத்துடன் வசிக்கிறார்கள். அவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story