கார் குண்டுவெடிப்பில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காஷ்மீரில் கார் குண்டு வெடிப்பில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டுக்கல்,
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் காஷ்மீரில் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் தரகுமண்டி வர்த்தக வணிக வளாகத்தில் நேற்று துணை ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தரகுமண்டி வர்த்தக வணிகர் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாள ர் அழகர்சாமி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து தரகுமண்டி வர்த்தகர் வணிக வளாகத்தில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று துணை ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் துணை ராணுவ வீரர்களின் உருவ படங்கள் கொண்ட பதாகைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். அப்போது உணர்ச்சிப்பெருக்கில் ‘பாரத் மாதா கி ஜே’ என தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வாகன டிரைவர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சங்க தலைவர் இக்பால் தலைமையில் 2 நிமிடம் அரசு வாகன டிரைவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் நத்தம் காந்தி சிலை முன்பு, முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பலியானவர்களின் உருவபடத்துக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. மேலும் நத்தம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராம்சன்ஸ் மெட்ரிக் பள்ளி, லாண்டீஸ் பள்ளி மற்றும் ஆர்.சி.பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதில் நத்தம் வட்டார முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வத்தலக்குண்டுவை அடுத்த மேலக்கோவில்பட்டியில் ராணுவ வீரர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ராணுவ வீரர் சின்னச்சாமி தலைமையில் மாணவ-மாணவிகள், ஊர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் துணை ராணுவ வீரர்களின் உருவ படங்கள் பதிக்கப்பட்ட பதாகை முன்பு அகல் விளக்கேற்றியும், மலர் தூவியும் மரியாதை செய்தனர். அதையடுத்து புனித சவேரியார் தேவாலயத்தில் மேலக்கோவில்பட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் விசேஷ திருப்பலியும் நடந்தது.
Related Tags :
Next Story