புதிய வரிவிதிப்புகள் எதுவும் இல்லை ரூ.10 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் பெங்களூரு மாநகராட்சியில் தாக்கல்


புதிய வரிவிதிப்புகள் எதுவும் இல்லை ரூ.10 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் பெங்களூரு மாநகராட்சியில் தாக்கல்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:15 PM GMT (Updated: 18 Feb 2019 9:47 PM GMT)

2019-20-ம் ஆண்டுக்கான பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் 18-ந் தேதி (அதாவது நேற்று) தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இரங்கல் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று காலை 11.45 மணியளவில் கூடியது. கூட்டம் தொடங்கியதும், பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசும்போது, வீரமரணம் அடைந்த துணை ராணுவப்படையினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர்களை பற்றி பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் இப்போது அதற்கு அனுமதியை வழங்காதது சரியல்ல என்றார்.

பட்ஜெட் தாக்கல்

அதற்கு மேயர் கங்காம்பிகே, இன்று (அதாவது நேற்று) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், இன்னொரு நாள் இரங்கல் தீர்மானம் மீது பேச அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை கண்டிப்பதாக கூறிவிட்டு பத்மநாபரெட்டி இருக்கையில் அமர்ந்தார்.

அதன்பிறகு 2019-20-ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திற்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதிக்குழு தலைவர் ஹேமலதா கோபாலய்யா தாக்கல் செய்தார். அதில் ரூ.10 ஆயிரத்து 688.63 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

புதிய வரிகள் இல்லை

அதில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. நலத்திட்ட பணிகளுக்கு மொத்தம் ரூ.645.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 198 வார்டுகளில் தலா 10 வீடுகள் கட்ட ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அன்னபுனேஸ்வரி’ என்ற பெயரில் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 5 நடமாடும் உணவக வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த தொழிலுக்கு மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரத்த சுத்திகரிப்பு மையங்கள்(டயாலிசிஸ் மையங்கள்)அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுவண்டி வழங்க...

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் வருகையை பதிவு செய்ய முக அடையாளத்தை காணுதல், பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்.

* வருகிற ஆண்டில் அடமானத்தில் உள்ள 2 மாநகராட்சி சொத்துகள் மீட்கப்படும்.

* சொத்து வரி ரூ.3,500 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. கல்வி நிலையங்களுக்கு முழு வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

* பெங்களூரு நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பெண்கள் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

* தெருவோர வியாபாரிகள் பொருளாதாரத்தில் மேம்பட ஒவ்வொரு வார்டுக்கும் தலா 15 தள்ளுவண்டி வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* ஒவ்வொரு வார்டுக்கும் தலா 50 சைக்கிள்கள் வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

குடிநீர் மையங்கள் அமைக்க...

* ஒவ்வொரு வார்டுக்கும் தலா 50 தையல் எந்திரம் வழங்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* மூத்த மக்களின் நலனுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு திறமை அடிப்படையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

* பள்ளி குழந்தைகளின் கல்வி சுற்றுலாவுக்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படுகிறது.

* பி.யூ.கல்லூரி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பள்ளி கல்லூரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்களை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. சானிட்டரி நாப்கின் அழிப்பு எந்திரத்தை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

ரத்த சுத்திகரிப்பு மையங்கள்

* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் நகரில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரம் வழங்கப்படும். இது வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

* ‘ஆரோக்கிய கவச’ என்ற திட்டத்தின் கீழ் புற்றுநோய் சோதனைக்கு ரூ.3 கோடி செலவில் 2 பஸ்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.

* நகரில் புதிதாக ரத்த சுத்திகரிப்பு மையங்களை(டயாலிசிஸ் மையங்கள்) அமைத்து அவற்றை நிர்வகிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* ஏழை இதய நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை உதவிக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பைக் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

விலங்குகள் சிகிச்சை மையம்

* கித்வாய் அரசு புற்று நோய் மருத்துவமனையில் உள்ள ‘தர்மசாலா’ தங்கும் கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* காற்று சுத்திகரிப்பு மையங்களை அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* ‘தாய் மடிலு’ திட்டத்திற்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* புதிதாக விலங்குகள் சிகிச்சை மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* நோய் தாக்கிய மற்றும் விபத்தில் சிக்கிய விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

* மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியின் உருவ சிலை அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

பூங்காக்களை மேம்படுத்த...

* உயர்மட்ட கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருது-ரொக்கப்பரிசு வழங்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

* மண்டூர், பெல்லள்ளி, மாவள்ளிபுரா, தொட்டபிதரகல்லு, சுப்பிரமணியபுரா, லிங்கதீரஹள்ளி, கன்னள்ளி, சீகேஹள்ளி ஆகிய இடங்களில் குப்பை கிடங்குகள் உள்ளன. அந்த கிடங்குகளை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டிற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* அரசின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பெங்களூரு நகரில் உள்ள பூங்காக்களை மேம்படுத்த ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* மரக்கன்றுகள் நட ரூ.5 கோடி நிதி, மரங்கள் கணக்கெடுப்புக்கு ரூ.2 கோடி, பசுமை பெங்களூருவை உருவாக்கும் வகையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதற்காக மரக்கன்று பூங்காவை அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

புதிய மயானங்களை உருவாக்க...

* ஏரிகளை நிர்வகிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* வளர்ச்சி பணிகளுக்கு புதிய வார்டுகளுக்கு ரூ.3 கோடி, பழைய வார்டுகளுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.465 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* புதிய மயானங்களை உருவாக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* மயானங்களை நிர்வகிக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* தெருவிளக்குகள் பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.79 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* ரூ.125 கோடியில் தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப பாதை அமைக்கப்படும். இந்த திட்டத்திற்காக திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பு

* ராஜகால்வாய்களை சீரமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* சாலை பாதுகாப்பு, குழிகளை மூடுதல், சாலை குறியீடுகள், எதிரொலிப்பான்கள் அமைக்க ரூ.142 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* புதிய பெங்களூரு என்ற திட்டத்தின் கீழ் ரூ.8,015 கோடி நிதியை செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வருகிற 2019-20-ம் ஆண்டில் ரூ.2,300 கோடி செலவு செய்யப்பட உள்ளது. இதில் சிமெண்டு சாலைகளை அமைத்தல், ஏரிகளை மேம்படுத்துதல், சாலைகளை தரம் உயர்த்துதல், சுரங்க பாதைகளை நிறுவுதல், பெரிய மழைநீர் தொட்டிகளை கட்டுதல், நடைபாதைகளை சீரமைத்தல், 110 கிராமங்களில் சாலைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்டவை பட்ஜெட்டில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் ஆகும்.

கருப்பு சட்டை

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு ெதரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி கருப்பு சட்டையை அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story