ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: அரசியல் கட்சியினர், ஆலை எதிர்ப்பாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: அரசியல் கட்சியினர், ஆலை எதிர்ப்பாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:43 PM GMT (Updated: 18 Feb 2019 10:43 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையொட்டி நேற்று அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசின் அரசாணையின்படி தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருக்கும். இந்த தீர்ப்பை வரவேற்று அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, குமாரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஹென்றிதாமஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர ம.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் முருகபூபதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் உள்ளிட்டோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அரசுக்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஒருவருக்கொரும் இனிப்பு வழங்கியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரியையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதே போன்று ஸ்டெர்லைட் எதிர்பாளர்கள் மாநகரின் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Next Story