பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் பணிகள் பாதிப்பு


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:47 PM GMT (Updated: 18 Feb 2019 10:47 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

திருப்பூர்,

15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்கிட வேண்டும், மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு அதன் சொத்துகளை மாற்றி கொடுக்க வேண்டும், பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ள ‘அவுட் சோர்ஸிங்’ முறையை கைவிட வேண்டும்,

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 நாட்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

ஆர்ப்பாட்டம்

அதே போல் திருப்பூர் பி.எஸ்.என்.எல்.தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த அர்ஜூணன், சவுந்திரராஜன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஜாபர், மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பு செயலாளர் ராமசாமி, தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளன கிளை செயலாளர் ஜான்சாமுவேல், தமிழ்நாடு தொலை தொடர்பு தொழிலாளர் சங்கத்தின் முத்துக்குமார், ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தேசிய தொலைதொடர்பு சம்மேளன சங்கத்தை சேர்ந்த ஆன்டனி மரியபிரகாசம் நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. பி.எஸ்.என்.எல் புதிய சிம்கார்டு வாங்க வந்தவர்களும், தனியார் செல்போன் சேவையை பி.எஸ்.என்.எல்.சேவைக்கு மாற்ற சென்றவர்களுக்கும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது.

Next Story