உள்துறையின் உயர் அதிகாரியை அனுப்பி வையுங்கள் மத்திய மந்திரிக்கு, சிவா எம்.எல்.ஏ. கடிதம்
புதுச்சேரிக்கு உள்துறையின் உயர் அதிகாரியை அனுப்பி வையுங்கள் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு சிவா எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரும், தெற்கு மாநில அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
நான் நீண்ட காலமாக புதுச்சேரி மாநில அரசியல் களத்தில் இருந்து வருகிறேன். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். புதுவையில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலை என்னை தங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
ஒரு மாநிலத்தின் முதல்–அமைச்சர் தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் மாளிகை முன்பு அறவழியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார். இந்த சூழ்நிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமலும், அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாமலும் ஒரு சர்வாதிகாரியைப்போல கவர்னர் மாநிலத்தைவிட்டு வெளியே சென்றது துரதிர்ஷ்டவசமானது. அவர் எப்போதுமே ஒரு சர்வாதிகார போக்குடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் ஒரு விதமான மோதல் போக்குடனே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனை கண்டித்து நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம்.
தற்போது பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமாக அச்சம் நிலவி வருகிறது. புதுச்சேரியை பொறுத்தமட்டில் எனக்கு தெரிந்தவரையில் பிரெஞ்சிந்திய போராட்டத்தின்போதுகூட இவ்வளவு ராணுவ வீரர்களை பார்த்ததில்லை. ஆனால் தற்போது தேவையில்லாமல் இவ்வளவு துணை ராணுவப்படையினரை குவித்து வைத்திருப்பது மக்கள் மத்தியில் ஏதோ புரட்சி நடைபெறுவதுபோல ஒரு பய உணர்வினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழலில் தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு மத்திய உள்துறையின் ஒரு உயர் அதிகாரியை புதுச்சேரி மாநிலத்துக்கு அனுப்பி உடனடியாக ஒரு தீர்வு காணவேண்டும். மேலும் தற்காலிகமாக பக்கத்து மாநில கவர்னர்களை புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகியாக நியமித்து அனைத்து விஷயங்களையும் முடித்துவைத்து மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் சிவா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.