திருவாரூர் கோர்ட்டு வளாகத்தில் வாலிபரை தாக்கிய போலீசார் நீதிபதி எச்சரித்ததால் மன்னிப்பு கேட்டனர்


திருவாரூர் கோர்ட்டு வளாகத்தில் வாலிபரை தாக்கிய போலீசார் நீதிபதி எச்சரித்ததால் மன்னிப்பு கேட்டனர்
x
தினத்தந்தி 20 Feb 2019 3:45 AM IST (Updated: 20 Feb 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கோர்ட்டு வளாகத்தில், வாலிபரை தாக்கிய போலீசாரை நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து போலீசார் மன்னிப்பு கேட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள உத்திரங்குடி ராதாநஞ்சை கிராமத்தை சேர்்ந்தவர் சேகர். இவருடைய மகன் ராஜேஷ்(வயது26). மது விற்றது தொடர்பான வழக்கில் ராஜேசை திருவாரூர் தாலுகா போலீசார் கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த கோர்ட்டு தினசரி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போடும்படி உத்தரவிட்டது.

அதன்படி திருவாரூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ராஜேஷ் கடந்த சில நாட்களாக கையெழுத்து போட்டு வந்தார். வழக்கம்போல் கையெழுத்து போடுவதற்காக அவர் நேற்று கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த அவரை மற்றொரு வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும்படி திருவாரூர் தாலுகா போலீசார் சிலர் அழைத்தனர். ஆனால் அவர் போலீசாருடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் ராஜேசை தாக்கி அங்கிருந்து இழுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், போலீசார் தன்னை தாக்கு வதாக சத்தம் போட்டு கூறினார்.

வாலிபர் ஒருவர் திடீரென சத்தம் போட்டதால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வாலிபரை போலீசார் தாக்கியது பற்றிய தகவல் திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி ராஜேந்திரனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி ராஜேசை தாக்கிய போலீசாரை அழைத்த நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டு வளாகத்தில் வைத்து தாக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?” என கேள்வி எழுப்பினார். மேலும் மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்போவதாக நீதிபதி போலீசாரை எச்சரித்தார்.

இதையடுத்து போலீசார் நடந்த சம்பவத்துக்கு நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டனர். போலீசாரால் தாக்கப்பட்ட ராஜேஷ், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story