போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு


போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Feb 2019 10:30 PM GMT (Updated: 19 Feb 2019 6:52 PM GMT)

கொரடாச்சேரி அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் ஆர்.சி. புக் திருப்பி தராததால் தகராறு ஏற்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற கணவன்-மனைவியை வழிமறித்து கத்தியால் குத்தினர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள விடயபுரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ்(வயது 40). இவருடைய தம்பி அருணகிரிராஜன்(37). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புக்கை வைத்து அதே ஊரை சேர்ந்த ஸ்டாலின் என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அருணகிரிராஜன், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தியதால் அதற்கு ஈடாக வைத்திருந்த ஆர்.சி. புக்கை திருப்பி தருமாறு ஸ்டாலினிடம், அருணகிரிராஜன் கேட்டுள்ளார். ஆனால் ஸ்டாலின், ஆர்.சி. புக்கை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அருணகிரிராஜனின் அண்ணன் அசோக்ராஜ் ஆர்.சி. புக் தராதது பற்றி ஸ்டாலினிடம் கேட்டுள்ளார்.

அப்போது ஸ்டாலினுக்கும். அசோக்ராஜூக்கும் இடையே வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக அசோக்ராஜும், அவருடைய மனைவி கோமதியும் சென்றுள்ளனர்.

விடயபுரம் ஆலமரத்தடி அருகில் ஸ்டாலின் தனது சகோதரர் லெனின் மற்றும் நண்பர்கள் திலகர், சித்தார்த்தன் ஆகியோரை கூட்டு சேர்த்துக்கொண்டு அசோக்ராஜை வழிமறித்துள்ளார்.

எங்கள் மீது போலீசில் புகார் கொடுக்க செல்கிறாயா? என்று கேட்டு அசோக்ராஜை லெனின் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த அசோக்ராஜின் மனைவி கோமதியையும் தாக்கியுள்ளனர். ஆனாலும் ஆத்திரம் தீராத ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அசோக்ராஜ் மற்றும் கோமதியை குத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் காயமடைந்த அசோக்ராஜ் மற்றும் கோமதி ஆகிய இருவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அசோக்ராஜ் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகர்(28) என்பவரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள லெனின், ஸ்டாலின், சித்தார்த்தன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story