குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 6:59 PM GMT)

குடிநீர் கேட்டு வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் அப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் குடிநீர் கிடைக்காமல் அருகில் உள்ள தோட்டங் களுக்கு சென்று பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவா முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினார். மேலும் ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story