மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.388 கோடியில் புதிய கதவணை


மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.388 கோடியில் புதிய கதவணை
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 7:37 PM GMT)

மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.388 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருச்சி,

திருச்சி அருகே உள்ள சுற்றுலா மையமான முக்கொம்பில் காவிரி ஆறு காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிந்து செல்கிறது. கொள்ளிடம் ஆற்றில் 180 ஆண்டுகளுக்கு முன் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் கட்டப்பட்ட மேலணையின் 9 மதகுகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டன.

உடைப்பு ஏற்பட்ட பகுதிகளின் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனை தொடர்ந்து வீணாக வெளியேறிய தண்ணீரை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் பணிகள் தீவிரமாக நடந்தது.

தற்காலிக சீரமைப்பு பணியை நேரில் வந்து பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடைப்பு ஏற்பட்ட மேலணை அருகிலேயே புதிய கதவணை கட்டப்படும் என அறிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ரூ.387 கோடியே 60 லட்சத்தில் கதவணை கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

புதிய கதவணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காணொலி காட்சி முறையில் நேற்று முக்கொம்பில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அத்துடன் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் பழைய மேலணை மேலும் பாதிக்கப்படாமல் இருக்க அதனை ரூ.38 கோடியே 85 லட்சத்தில் சீரமைப்பதற்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரிடம் புதிய கதவணையின் மாதிரியை காட்டி விளக்கினார்கள்.

இதனை தொடர்ந்து முக்கொம்பில் தயார் நிலையில் இருந்த திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில் ‘காவிரி, கொள்ளிடம் பிரியும் இடத்தில் புதிய கதவணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதற்காக முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கதவணையால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முறையான பாசன வசதி பெறுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். எனவே திருச்சி மாவட்ட மக்கள் சார்பில் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். அதன் பின்னர் விவசாயிகள் சார்பில் லால்குடி அருகே உள்ள சங்கேந்தி என்ற கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் நன்றி தெரிவித்து பேசினார்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார், நடு காவிரி வடிநில வட்ட சிறப்பு தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய கதவணையானது 800 மீட்டர் நீளத்தில் 45 மதகுகளுடன் கட்டப்பட இருக்கிறது. கதவணையின் மேல் பகுதி 4½ மீட்டர் அகல சாலையுடன் அமைக்கப்படும். கட்டுமான பணியானது நிலைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு ‘பைல் பவுண்டேசன்’ அடிப்படையிலும், மதகுகள் நவீன தொழில் நுட்பத்தின்படி நீரியல் இயக்கிகள் மூலம் இயங்குமாறும், பணி தொடங்கிய 24 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய கதவணையின்மூலம் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள புள்ளம்பாடி, பெருவளை மற்றும் அய்யன் வாய்க்கால்கள் வாயிலாக 56 ஆயிரத்து 953 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெறுவதோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 12 லட்சத்து ஆயிரத்து 507 ஏக்கர் பரப்பில் காவிரி டெல்டா பாசன பகுதிகளும் பயன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story