பாட்டவயல் அருகே பிடிபட்ட சிறுத்தைப்புலி வண்டலூருக்கு கொண்டு செல்லப்பட்டது
பாட்டவயல் அருகே பிடிபட்ட சிறுத்தைப்புலி வண்டலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாட்டவயல் அருகே வீட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் ராயன்(வயது 70). இவரது வீட்டிற்குள் கடந்த 5-ந் தேதி சிறுத்தைப்புலி ஒன்று பதுங்கி இருந்தது. அப்போது ராயன் வீட்டில் இல்லை. வெளியூர் சென்றிருந்தார். மறுநாள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, சிறுத்தைப்புலி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் பிதிர்காடு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடித்தனர். அப்போது அது 1 வயதுடைய பெண் சிறுத்தைப்புலி என்பதும், உடலில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பிதிர்காடு வனத்துறை அலுவலகத்துக்கு சிறுத்தைப்புலி கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறுத்தைப்புலியின் உடலில் இருந்த காயங்களுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து சிறுத்தைப்புலி கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தைப்புலியை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் மாவட்ட வன அலுவலர் ராகுல், உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் மனோகரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சிறுத்தைப்புலியை கூண்டோடு லாரியில் ஏற்றினர்.
பின்னர் வேட்டைத்தடுப்பு காவலர்களின் கண்காணிப்பில் சிறுத்தைப்புலி வண்டலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story