காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் குடும்பத்துக்கு வைகோ நேரில் ஆறுதல் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்


காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் குடும்பத்துக்கு வைகோ நேரில் ஆறுதல் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:15 PM GMT (Updated: 19 Feb 2019 7:55 PM GMT)

காஷ்மீர் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு வைகோ நேரில் ஆறுதல் கூறினார்.

கயத்தாறு,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் கயத்தாறு அருகே சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் (வயது 30) வீர மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சவலாப்பேரிக்கு சென்று சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார். அங்குள்ள சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வைகோ, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, சுப்பிரமணியனின் நினைவிடத்தில் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனுக்கு இன்று (அதாவது நேற்று) பிறந்த நாள். அவரது பிறந்த நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளேன். சுப்பிரமணியன் உள்ளிட்ட துணை ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு ஒவ்வொரு இந்தியரும் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளோம். பாகிஸ்தான் நாட்டுக்கு தக்க பதிலடியை இந்திய அரசு கொடுக்க வேண்டும்.

சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி பி.காம். பட்டதாரி. அவருக்கு 10-ம் வகுப்பு தகுதிக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவி வழங்கி உள்ளனர். இந்த வேலையானது பல்வேறு இடங்களுக்கு அலைந்து செல்லக் கூடியது. எனவே, அவருக்கு பட்டதாரி தகுதியில் நிலையான இடத்தில் இருந்து வேலை செய்யும் வகையில், அரசு வேலை வழங்க வேண்டும். இதுகுறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பேசினேன். அவர் நல்ல பெண்மணி. இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

சுப்பிரமணியனின் அண்ணன் கிருஷ்ணசாமி டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் தமிழக அரசு வேலை வழங்கினால், அவர் பெற்றோரை கவனித்து கொள்வதற்கு எளிதாக இருக்கும்.

சுப்பிரமணியனுக்கு சவலாப்பேரி நாற்கர சாலையில் சிலையும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபமும் அரசு அமைக்க வேண்டும். இல்லையெனில் கட்சி சார்பற்று, மக்களுடன் சேர்ந்து சிலை, மணிமண்டபம் அமைக்க ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி வடக்கு), செல்வம் (தெற்கு), நிஜாம் (நெல்லை மாநகர்), ராஜேந்திரன் (நெல்லை புறநகர்), தீர்மானக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சிவபாண்டியன், மரைக்காயர், நகர செயலாளர் கட்டபொம்மு முருகன், தொகுதி செயலாளர் முத்துபாண்டியன், கிளை செயலாளர் கொம்பையா பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story