அன்னவாசல் பகுதிகளில் கழுதை பாலுக்கு திடீர் மவுசு 100 மில்லி ரூ.500-க்கு விற்பனை


அன்னவாசல் பகுதிகளில் கழுதை பாலுக்கு திடீர் மவுசு 100 மில்லி ரூ.500-க்கு விற்பனை
x
தினத்தந்தி 20 Feb 2019 4:15 AM IST (Updated: 20 Feb 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் பகுதிகளில் கழுதை பாலுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. கழுதை பால் 100 மில்லி ரூ.500 வரை விற்பனை ஆகின்றது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில், விருத்தாசலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், 10-க்கும் மேற்பட்ட கழுதைகளுடன், ஊர் ஊராக சென்று, கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கேட்பவர்களுக்கு, அங்கேயே பாலை கறந்து தருகின்றனர். கழுதை பால், ஒரு சங்கு ரூ.50-க்கும், 100 மில்லி ரூ.500-க்கும் விற்பனை செய்கின்றனர். கழுதை பால் குடித்தால் சளி, இருமல், மஞ்சள் காமாலை, பித்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகும் என கூறி, வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதை கிராம மக்களும் ஆர்வமுடன் வாங்கி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வருகின்றனர். இதனால் கிராமப்புறத்துக்கு பகுதிகளில் கழுதைபாலின் மவுசு அதிகமானதால் விற்பனை அமோகமாக நடக்கிறது. கழுதைப்பாலுக்கு விற்பனை செய்பவர் கூறியதாவது:-

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த நாங்கள், தமிழகம் முழுவதும் சென்று, கழுதை பால் விற்று வருகிறோம். கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது. வெறும் வயிற்றில், ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்தால் பலன் உண்டு. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு 50 மில்லி கொடுக்க வேண்டும். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை கிராம பகுதிகளுக்கு கொண்டு சென்று, கலப் படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story